Perambalur District Collector orders to improve all basic facilities in Vadakalur tribal area!

Perambalur Collector

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கலூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் க.கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டார்.

அப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களிடம் கலந்துரையாடிய கலெக்டர், அம்மக்களின் கோரிக்கைகளையும், என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றது என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் காந்திநகர் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

தங்குதடையின்றி சீரான குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதை மக்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டவர், நிலமற்றவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அவ்வாறு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நபர்களுக்கும், ஏற்கனவே பட்டா இருந்து வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கும் அரசின் திட்டங்களின் மூலம் வீடு கட்டி தருவதற்கான ஆணையினை உடனடியாக ஆய்வு செய்து தயார் செய்திட வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவிட்டார்.

கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலைகள் அமைத்திடவும், போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைத்திடவும், கழிவறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையினை உருவாக்கிடும் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் கழிவறை அமைத்திடவும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இருளர் இன மக்கள் சொந்தமாக தொழில் செய்திட ஏதுவாக அவர்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கிடவும், படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வி கடன் உதவி வழங்கிடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இப்பகுதியினை ஆய்வு செய்து, தேவைக்கேற்ப கடனுதவிகளை ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தங்கள் பகுதிக்கு நேரில் ஆய்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டதற்கு கலெக்டருக்கு இருளர் இன மக்கள் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, ஆர்.டி.ஓ ச.நிறைமதி, குன்னம் வட்டாட்சியர் அனிதா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!