Perambalur District Planning Committee sworn in!

பெரம்பலூர் மாவட்ட திட்டக் குழு கூட்டம், குழுவின் தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான சி.இராஜேந்திரன் தலைமையில், குழுவின் துணைத் தலைவரும், கலெக்டருமான க. கற்பகம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ .பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள் டி.சி.பாஸ்கர், மகாதேவிஜெயபால், முத்தமிழ்ச்செல்வி மதியழகன், டாக்டர்.அ.கருணாநிதி, சோ.மதியழகன், அருள்செல்வி காட்டுராசா, து.ஹரிபாஸ்கர், செல்வலட்சுமி சேகர் ஆகியோர் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் திட்டக் குழுவின் பணிகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அரசின் சார்பில் ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், பெரம்பலூர் மாவட்டத்தில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் ஏதும் இருபபின் அவற்றை இக்குழுவின் கவனத்திற்கு அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல், 130 ஹெக்டேர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடுதல் என்பன போன்ற மக்கள் நலத்திட்டங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை அழைத்து எடுத்துக்கூறி செயல்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.

திட்டக் குழுவின் தலைவர் பேசுகையில், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம் முதன் முறையாக தற்போது நடைபெறுகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில்தான் திட்டக்குழு புத்துயிர் பெற்றிருக்கின்றது. இதற்காக மாவட்ட திட்டக்குழுவின் சார்பிலும், மாவட்ட ஊராட்சியின் சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.அங்கயற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்துார்), மீனா அண்ணாத்துரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), நகராட்சி ஆணையர் (பொ) ராதா, பேரூராட்சி தலைவர்கள் ஜாகீர்உசேன் (லப்பைகுடிகாடு), சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), வள்ளியம்மை (அரும்பாவூர்), மாவட்ட ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!