Perambalur district public requests to control Parthenium plants spreading disease

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளொருபொழுதும் 3 அடி முதல் 4 அடி உயரம் வரை வயல்வெளிகள், தரிசு நிலங்கள், வாய்க்கால் வரப்புகள், காலியாக கிடக்கும் களங்கள், சாலை ஓரங்களில் தற்போது மழையால் அழித்து போன பார்த்தீனியம் செடிகள் மீண்டும் முளைத்து வேகமாக வளர்ந்து வருகின்றன. காற்றின் மூலம் அதிவேமாக பரவும் இந்த விதைகள் பயிர்களை அழித்து விருட்சமாக மாறி வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளைபூக்களுடன் இந்த செடிகள் வெளியிடும் காற்றை சுவாசித்தாலே ஆஸ்துமா, சொரியாஸிஸ் போன்ற நோய்களை உண்டாக்கும் அதோடு அரிப்பையும் ஏற்படுத்தி தோல் நோய்களை ஏற்படுத்தும்.

பார்த்தீனியத்தின் மகரந்தத்தூள் சரும நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை உடையது. இத்தன்மை ஜுன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படும். மேலும் இக்களைச்செடியின் மகரந்தத்தூள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது. ஒரு பார்த்தீனியம் செடி 624 மில்லியன் மகரந்தங்களை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை கொண்டது மற்றும் பல மைல்கள் தூரம் காற்றின் மூலம் பரவக்கூடியது.

இந்த நச்சு செடி முதலில் தரிசு நிலங்களில் பரவி இருந்தது. தற்போது விளை நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பார்த்தீனிய செடிகள், கோதுமை இறக்குமதியின் போது இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்த நச்சு செடி ஆண்டிற்கு 3 முறை வளரும் தன்மை உடையவை. சுமார் 10,000 விதைகள் ஒரு செடியில் இருந்து உற்பத்தி ஆகின்றது. இந்த விதைகள் அனைத்தும் 100 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டவை. விதைகள் மண்ணில் நீண்ட காலம் வரை பாதிப்படையாமல் இருக்கும். கால்நடைகள் பார்த்தீனிய செடிகளை உண்ணுவதில்லை என்றாலும், அதன் நச்சுத்தன்மை கால்நடைகள் பார்த்தீனியம் செடிகளின் வழியாக நடக்கும் போது அல்லது அதனை நுகரும் போதும் பரவுகிறது. அதன் பின் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.

எருமைகளுக்கும் அதன் கன்றுகளுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது குறைவான மற்றும் கடுமையான நச்சுத்தன்மை உடலில் ஏற்பட்டு, வாய்ப்பகுதிகள் மற்றும் குடல்பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றது. சிறுநீரகம் மற்றும் ஈரல் பகுதிகளில் ஏற்படும் நச்சுத்தன்மையால் கால்நடைகளில் மலட்டு தன்மை ஏற்படுகிறது. பார்த்தீனியம் பரவியுள்ள பகுதிகளில் மேயும் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால் மனிதர்களுக்கு தீமை விளைவிக்கக் கூடியது, என தெரியவந்துள்ளது. ஆகையால் பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டிதொடடி எங்கும் வேகமாக பரவி வரும் பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!