Perambalur Election: An independent candidate who paid Rs 500 instead of Rs 25,000 as advance deposit caused a stir!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த முதியவர் ஒருவர் இந்திய அரசியல் சாசனப்படி ரூ.500 மட்டுமே டெபாசிட் தொகையாக செலுத்த முடியும் எனக்கூறி 500 ரூபாய் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் மனோகரன்(63) இவர் நேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியரும் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது முன்வைப்புத் தொகையாக ரூ.500 மட்டுமே செலுத்தினார்.
அப்போது ரூ.25,000 முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்த போது, இந்திய அரசியல் சாசனப்படி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ரூ.500 மட்டுமே முன்வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும், சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஒருவர் ரூ.250 மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் உள்ளது. அதன்படியே நான் ரூ.500 செலுத்துகிறேன் என்று கூறினார்.
இதனையடுத்து அவரது வேட்பு மனுவை ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இருப்பினும் இந்த மனு உரிய முன்வைப்பு தொகை செலுத்தாததால் நிராகரிக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து மனோகரனிடம் கேட்டபோது தான் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோல நாடாளுமன்றம் சட்டமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும், ஒவ்வொரு முறையும் தனது மனுவினை குறைவான முன்வைப்புத் தொகையை செலுத்தியதற்காக நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், தெரிவித்த அவர், இந்திய அரசியல் சாசனப்படி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூ.500 மட்டுமே செலுத்த வேண்டும், ரூபாய் 25 ஆயிரம் என்பது பண பலத்தை காட்டும் வகையில் உள்ளது. ஏழை எளியவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் வகையிலேயே இந்திய அரசியல் சாசனத்தில் முன்வைப்பு தொகை ரூ.500 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. 1996 ஆம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ததால் , அதை தடுக்கும் விதமாகவும் தேவையற்ற வேட்பு மனுக்களை தவிர்க்கும் விதமாகவும் டெபாசிட் தொகையினை தேர்தல் ஆணையம் உயர்த்தியது. அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூ.25,000 என்ற நிலையில் உள்ளது.
இதனை மாற்ற வேண்டும் இந்திய அரசியல் சாசனப்படி தேர்தலின் போது முன்வைப்புத் தொகை வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இது போன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதாகவும், இதுவரை சுமார் 10 முறை இதுபோல வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இச் சம்பவத்தினால் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.