பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக்கடை ஒன்றில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருடப்பட்டது இன்று காலையில் தெரியவந்தது.
பெரம்பலூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). இவர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆயத்த ஆடை வைத்துள்ளார். இன்று காலையில் விற்பனைக்காக கடையை திறந்த போது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு துணிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
திருடப்பட்ட துணிகளின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் எனக்கூறப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே கடையில் கடந்த ஓராண்டுக்கு முன் ஜவுளிகள் திருடு போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.