Perambalur farmers can store their produce in government warehouses free of charge till 31st May; Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மே 31ந் தேதி வரை பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கில் இலவசமாக சேமித்து பயன்பெறலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களை பேரிடர் காலங்களில் கெட்டுப்போகாமலும் மற்றும் நல்ல விலை கிடைக்காத காலங்களில் இருப்பு வைக்கவும், பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கில் மே 31 வரை இலவசமாக இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

மேலும் அவ்விளைப் பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூபாய் மூன்று லட்சத்திற்கு மிகாமல் பொருளீட்டுக் கடன் பெறலாம். முதல் 30 நாட்களுக்கு வட்டி இல்லாமலும், 31 முதல் 180 நாட்கள் வரை 5 சதவீதமும், அதாவது மாதத்திற்கு 42 பைசா வட்டி வீதத்தில் பொருளீட்டுக் கடன் பெற்று பயனடையலாம். அல்லது இலவசமாக சேமித்தும் வைக்கலாம். மேலும் நல்ல விலை கிடைக்கும் தருவாயில் விளைப்பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வரும் வியாபாரிகளிடம் விற்பனை செய்துவிட்டு வாங்கிய கடனையும் செலுத்திவிட்டு அதிக லாபமும் பெற வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்டவாறு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பெரம்பலூர் மாவட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள குளிர்பதன கிடங்கு 25 மெ.டன்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் வைத்து சேமிக்க உரிய கொள்ளளவு கொண்டது. மேலும் காய்கறிகள், பழங்களை குளிர்பதன கிடங்கில் வைத்து சேமித்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதோடு அழுகி வீணாவதையும் தடுக்கலாம். நல்ல விலை இல்லா தருணத்திலும் மேற்கண்ட விளைபொருட்களை குளிர்பதன கிடங்கில் வைத்து பாதுகாப்புடன் சேமித்து அதிக விலை நிலவும் தருவாயில் விற்று அதிக பலன் பெறலாம். எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் மேற்கண்ட குளிர்பதன கிடங்கினை வேளான் வணிக துணை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் விற்பனை குழு செயலர் ஆகியோர்களை அணுகி பயன்படுத்திக்கொள்வதுடன் மே 31-ந் தேதி வரை இலவசமாக இருப்பு வைத்து பயன்பெறலாம்.

விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!