Perambalur: For the first time in Tamil Nadu, a shop for products made by convicts!
பெரம்பலூர் சிறையில் புதிய அங்காடி தமிழ்நாடு முழுவதும் மத்திய சிறைகளில் தண்டனை கைதிகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவு மற்றும் திண்பண்டங்களை சந்தைப்படுத்தும் நோக்கத்துடன், கைதிகளின் செயல்திறனை மேம்படுத்தும் விதமாக கிளைச்சிறைகளில் அங்காடிகளை திறந்து வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் கிளைச்சிறைச்சாலை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறை அங்காடியை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.(பொறுப்பு) பழனி திறந்து வைத்து, உணவு மற்றும் திண்பண்டங்கள், துணிகள், காலணிகள் மற்றும் இதர உபயோகப்பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மூலம் தயாராகும் உற்பத்தி பொருட்களை துறையூர், பெரம்பலூர், அரியலூர் கிளைச்சிறை அங்காடிகளுக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தையும் டி.ஐ.ஜி. பழனி இயக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- முதல் முறையாக… கோவை மத்திய சிறையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், வேலூர் மத்திய சிறையில் தயாராகும் தோல் பொருட்கள், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மத்திய சிறைகளில் உற்பத்தியாகும் உணவுபொருட்கள் அரசு உத்தரவின்படி கிளைச்சிறை அங்காடிகளில் சந்தைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பெரம்பலூர் கிளைச்சிறை வளாகத்தில் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. கிளைச்சிறை அங்காடிகளில் பொருட்கள் அதிகபட்ச சில்லரை விலையை விட குறைவாக கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அங்காடி எல்லா நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் கிளைச்சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், முதன்மை தலைமை காவலர் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள், சண்முகம், ராம்மோகன், செந்தில்குமார் மற்றும் போலீசார் பெருமாள், முருகேசன், ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.