பெரம்பலூர் ஆலத்தார் ஒன்றியம், கீழமாத்துரை சேர்ந்தவர் பிச்சை மணி மகன் செல்வேந்திரன்(37). இவர் தனது மனைவி வேணி (30), மகன்கள் எழிலோவியன்(3), முகிலோவியன்(1) ஆகியோருடன் மண்ணெண்ணெய் கேனுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அங்கு செல்வேந்திரன் தனது தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர்.
பின்னர் செல்வேந்திரன் கூறுகையில், நான் எம்எஸ்சி, பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினேன். இதில் தேர்ச்சி பெறசெய்து, வேலைவாங்கி தருவதாக பெரம்பலூரை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன் கூறினார். இதனை நம்பி வட்டிக்கு பலரிடம் கடனாக பணம் பெற்று பெரம்பலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பெரியசாமி மூலமாக பூவைசெழியனிடம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம்தேதி கொடுத்தேன்.
2 ஆண்டுகள் ஆகியும் வேலைவாங்கி தரவில்லை. இதையடுத்து பல முறை பூவைசெழியனை நேரில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பூவைசெழியன் பணத்தை தரமறுத்து தகாத வார்த்தையால் திட்டி பணத்தை கொடுக்க முடியாது, எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு என கூறினார்.
இதனால் கடன் பெற்ற பணத்தை என்னால் திருப்பிதர முடியவில்லை. கடன் கொடுத்த கடன்தாரர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வேலையில்லாமல் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன்.
இதனால் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள வந்தேன். ரூ 5.20 லட்சம் பணம் மோசடி செய்த முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி பெற்றுத்தரவேண்டும். இல்லையென்றால் என்னால் வாழமுடியாது. எனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்வோம் என்றார். இதையடுத்து போலீசார் செல்வேந்திரனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்துகின்றனர்.