Perambalur: Home Guard Day Celebration; Vallalar Aravindan’s own funds for Naranamangalam school at Rs. 10 lakhs toilet, perimeter wall!
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலத்தில் அரசு உதவி பெறும் முருகன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பெரம்பலூர் வட்டார ஊர்க்காவல்படை தளபதியும், வள்ளலார் நிறுவனங்களின் மேலாண் இயக்குனருமான ஜெ. அரவிந்தன் தனது சொந்த நிதி ரூ.10 லட்சத்தில் கழிவறை கட்டிக்கொடுத்து, சுற்றுச்சுவர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார். இதை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ஊர்க் காவல் படை தினவிழாவும் நடந்தது.
திருச்சி சரக ஊர்க்காவல்படை உதவி தளபதி ராஜன் வரவேற்றார். திருச்சி சரக போலீஸ் டிஐஜி மனோகர் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி வாழ்த்தி பேசினார். குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை டிஜிபி வன்னிய பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கழிவறை மற்றும் சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். மேலும் பள்ளிக்கு தேவையான டேபிள், சேர், மாணவ, மாணவிகளுக்கு தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊர்க்காவல்படையினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் திருச்சி மாநகர ஊர்க்காவல்படை வட்டார தளபதி கே.ராஜா, திருச்சி ரைபிள் கிளப் பொருளாளர் சிராஜுதீன், அரியலூர் வட்டார தளபதி ஜீவானந்தம், திருச்சி வட்டார தளபதி சய்ப் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் வட்டார ஊர்க்காவல் படை தளபதி அரவிந்தன் நன்றி கூறினார்.