Perambalur: In a public grievance meeting, stream encroachment petition; Go in person collector action

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடிவந்து பொதுமக்கள் தரும் மனுக்களை அலுவலர்கள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதனடிப்படையில் ஏராளமான மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று (03.07.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் வட்டம் அருமடல் பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களின் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள நீரோடையினை பக்கத்தில் உள்ள வயலிற்கு சொந்தமானவர்கள் அடைத்து வைத்திருப்பதாகவும், மழைக் காலங்களில் நீரோடை வழியாக நீர் செல்ல இயலாமல் வயல்களுக்குள் வந்து பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுகின்றது. எனவே, நீரோடையினை மீட்டுத் தருமாறு கலெக்டரிடம் அருமடலைச் சேர்ந்த அன்பழகன் உள்ளிட்ட சில இளைஞர்கள், விவசாயிகள் மனு கொடுத்தனர்.

இது குறித்து கலெக்டர் கற்பகம் இன்று (04.07.2023) அருமடல் கிராமத்தில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். சாலையோரம் உள்ள வயலில் இருந்து, நீரோடை அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று நீரோடையின் வழித்தடத்தை பார்வையிட்டார்.

அங்கிருந்த வயல்வெளிகளுக்கு சொந்தமான நபர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், அவர்களிடம் பேசிய அவர், நீர் என்பது நமது வாழ்விற்கான அடிப்படை ஆதாரம். அனைவருக்கும் பொதுவானது நீர். உலகிற்கே உணவளிக்கும் விவசாய பெருங்குடி மக்கள் பெருந்தன்மை மிக்கவர்கள் என்பதை நான் அறிவேன். ஒருசிலரின் வயல்களுக்கு நீர் கிடைப்பதும் சிலரின் வயல்களுக்கு நீர் கிடைக்காமல் இருப்பதும், நீரோடை ஆக்கிரமிப்பால் சிலரில் வயல்களில் மழை காலங்களில் நீர் தேங்கி பயிர்கள் அழுகும் நிலையினை உருவாக்குவதும் நியாயமற்ற செயலாகும். அதுமட்டுமல்லாது நீர் வழித்தடங்களை அடைப்பது, ஆக்கிரமிப்பது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, நீர்வழித்தடங்கள் முழுமையாக துார் வாருவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த கலெக்டர், வருவாய்த் துறையினர், வளர்ச்சித் துறையினர் இணைந்து செயல்பட்டு ஒருவார காலத்திற்குள் நீரோடையில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றிடவும், அடைபட்டிருந்தால் அவற்றை துார் வாரி வாரி முழுவதும் தண்ணீர் சீராக சென்றிட துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதேபோல மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட, செங்குணம் பகுதியில் உள்ள குளத்திற்கு நீர் வரத்து வரும் பாதைகளை சரி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும் சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நீர் வரத்திற்கான பாதைகளை சரி செய்து தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவரே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பிரச்சனைக்கு தீர்வு கண்டதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். அரசு பணியாளர்கள்பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!