Perambalur Independent candidate who defeated political parties in 3 elections is contesting for the 4th time!
பெரம்பலூரில் களம் கண்ட கடைசி மூன்று தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, பிரதான அரசியல் கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மீண்டும் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு மீண்டும் 4வது முறையாக போட்டியிடுகிறார் ரமேஷ்பாண்டியன் என்கிற சுயேட்சை வேட்பாளர்.
கடந்த 2001, 2006, 2011 என மூன்று முறை பெரம்பலூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக களம் கண்டு கரை சேர்ந்தவர் ரமேஷ்பாண்டியன். 26 வயதில் 14 வது வார்டில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்றார். வார்டு மறுசீரமைப்பிற்கு பிறகு தற்போது 5 வது வார்டில் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்துள்ளார். பேச்சிலும் உடையிலும் செயலிலும் எப்போதும் எளிமை யாக வலம் வரும் இந்த சுயேட்சை கடந்த மூன்று முறையும் பிரதான ஆளும், எதிர், கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் சவாலாக இருந்துள்ளார் என்பதற்கு அவர் பெற்ற வெற்றியே சான்று.
பணப் பலம், ஆட்பலம், அதிகாரப் பலம் இல்லாத ரமேஷ்பாண்டியன் எளிமையானவர். 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் வார்டுக்குட்பட்ட பகுதியில் அனைவரின் வீட்டு செல்ல்பிள்ளையாக வீட்டில் ஒருவனாக இருப்பதே தனது வெற்றிக்கு காரணம் என்கிறார். நண்பர்கள் ஆதரவோடு கடந்த மூன்று முறையும் வெற்றி பெற்றது போல் தற்போதும் வெற்றிபெற்று அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன் என உறுதி கூறுகிறார். வாகன சீட்கவர் தைத்து பிழைப்பு நடத்தி வந்த தனக்கு கவுன்சிலர் எனும் பதவியை தந்து அழகுபார்த்த தம்பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்தவரை அரசின் திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளேன் என்கிறார்.
ரமேஷ்பாண்டியன் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் அவர்களுல் ஒருவராக நிற்பதும், மக்களுக்கு தேவையானதை அவர்கள் கேட்காமல் செய்ததுமே ரமேஷ்பாண்டியன் வெற்றிக்கு காரணம் என்கின்றனர் பொதுமக்கள். எவ்வித செலவும் செய்யாமலேயே கடந்த மூன்று முறையும் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றதாக கூறும் ரமேஷ்பாண்டியன், தற்போதும் அந்த நடைமுறையே தொடரும் என்கிறார்.
நண்பர்களின் ஆதரவே தனது வெற்றிக்கு காரணம் என பெருமைகொள்ளும் ரமேஷ்பாண்டியன் போன்ற சுயேட்சை வேட்பாளர்கள் களம் கண்டு வெற்றிபெறுவதே தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி என்று கூட சொல்லலாம். பிரதான அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி களம் காணும் இந்த தேர்தலில் சுயேட்டை ரமேஷ்பாண்டியன் மீண்டும் வெற்றிபெற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.