Perambalur: International Drug Abolition Day, Students Awareness Rally; Collector started.
சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை, வருவாய்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை இணைந்து கள்ளச்சாராயம், மது மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்திய பேரணியை கலெக்டர் கற்பகம் இன்று எஸ்.பி ஷ்யாம்ளாதேவி முன்னிலையில் பாலக்கரையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் . செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் ஜெயராமன், அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவன உரிமையாளர் கே.ஆர்வி. கணேசன், மதுரா பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் மற்றும்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ரோவர் பார்மசி கல்லூரி, சீனிவாசன் நர்சிங் கல்லூரி, கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, பனிமலர் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 877 மாணவ,மாணவிகளும், சுமார் 60க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.
பேரணியின்போது போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மாணவ,மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை வழியாக வானொலி திடல் அருகே சென்று முடிவுற்றது.
முன்னதாக, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களின் தலைமையிடங்களிலும் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அதனடிப்படையில், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதியிலும், நடந்த விழிப்புணர்வு பேரணிகளில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக்கான ஏடி. எஸ்.பி பாலமுருகன், பெரம்பலூர் நகராட்சி ணைத்தலைவர் ஹரிபாஸ்கர், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.