Perambalur: Jallikattu in Kolathur; Minister Sivashankar inaugurated!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் (கிழக்கு) கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 ம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாடு பிடி வீரர்களும் வருவாய்த்துறை மூலமாக முறையாக பெயர் பதிவு செய்யப்பட்டு களமிரக்கப்பட்டனர். மேலும் மாடு பிடி வீரர்களின் உடல் தகுதி குறித்து மருத்துவக்குழுவினர் முழு ஆய்வு செய்த பின்னரே, அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். கால்நடை பராமரிப்புத்துறையினர் மூலமாக போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளை முறையாக பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்பட்டது.
மேலும், மருத்துவ துறையின் மூலம் மாடு பிடி வீரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் மருத்துவ குழுவினருடன், அவசர கால ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 727 காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 280 மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்து பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் அடக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் ஏராளமான சிறப்பு பரிசுகளை வழங்கினர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் ஆங்காங்கே குடிநீர், நீர்மோர் உள்ளிட்டவைகளை பார்வையாளர்களுக்கு வழங்கினார்கள். சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று நடைபெற்ற போட்டியில் 38 நபர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் சார் ஆட்சியர் கோகுல் , கால்நடைத்துறை உதவி இயக்குநர் தமிழரசன், ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, முக்கிய பிரமுகர் சிவசங்கர், கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வித்யா இளையராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், ஆலத்தூர் ஊராட்சி யூனியன் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.