Perambalur JR One Shoe Manufacturing Factory; Tamil Nadu Chief Minister M.K.Stalin inaugurated!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.11.2023) பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இத்தொழிற்சாலையை அமைக்க 28.11.2022 அன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்கள் அதன் பின்னர், மிகச் சரியாக ஓர் ஆண்டு காலத்தில் இத்தொழிற்சாலை நிறுவப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இப்பெருமை நிலைபெறவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

காலணிகளைப் பொறுத்தவரை, உலக அளவில் தோல் அல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு வீரர்களின் காலணிகளுக்கான நுகர்வும் அதிக அளவில் உள்ளன. மேலும், இத்துறையில் அதிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும், ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. இவை மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இத்துறை திகழ்கிறது.

இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதில் பெரும் அளவில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், 23.8.2022 அன்று “தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை-2022” தமிழ்நாடு முதலமைச்சரால் வெளியிடப்பட்டது.

”அனைவரையும் உள்ளடக்கிய பரவலான மற்றும் நிலையான வளர்ச்சி” என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சிப்காட் நிறுவனம் மூலமாக ஒரு தொழிற் பூங்காவை அமைத்துள்ளது. இப்பூங்காவில் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதன் மூலமாக,

பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும்.இந்நிறுவனம், 2028-ஆம் ஆண்டிற்குள் 2,440 கோடி ரூபாய் முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்திடவும் திட்டமிட்டுள்ளது.

இவ்விழாவில், பெரம்பலூர் மாவட்டம், எறையூரிலிருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு
மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, எம்.பிக்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன், எம்.எல்.ஏ பிரபாகரன், தொழில், முதலீட்டு
ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திரு.வி.அருண் ராய் , தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கி .செந்தில் ராஜ், பெரம்பலூர் கலெக்டர் கற்பகம், ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அஹமத், ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜாங் ராங் வு, JR One இயக்குநர் ஜாங், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சிறப்பாக நடைபெறும், JR ஒன் ஃபுட்வேர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினேன். சரியாக ஓராண்டு காலத்தில் துவக்க விழாவில் பேசுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி!

முதலீட்டாளர்களின் முதல் தேர்வு, தமிழ்நாடு! மாநிலத்தில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான் இதற்கு முக்கியமான காரணம்.
இங்கே பிசினஸ் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதும், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு எப்படித் திகழ்கின்றது என்பதற்கும் இது கண்கூடான சாட்சி! வளர்ச்சித் திட்டங்கள் என்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தோல் மற்றும் காலணித் துறைகளை பொறுத்தவரைக்கும், இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது உங்களுக்கே அது நன்றாக தெரியும்!

கடந்த ஆண்டு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ நான் வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளுக்குப்
பிறகு, இந்தத் துறையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது நமக்கெல்லாம் கண்கூடாவே தெரிகிறது.

இதுமாதிரியான வளர்ச்சியை பார்க்கும்போது, 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது! இந்தத் துறையில், நம்முடைய தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தவேண்டும், இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திடவேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சிப்காட் / சிட்கோ மற்றும் பொது – தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில்கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புறேன்.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில், இவ்வளவு சிறப்பான திட்டத்திற்கான திறப்பு விழா நடைபெறுகிறது. “பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி. சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி” என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு!

பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளிக்கின்ற வகையில், இந்தத் திட்டத்திற்கான திறப்பு விழா இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக
பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இன்றைக்கு, முதற்கட்டமாக, 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த JR One கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028-ஆம் ஆண்டுக்குள், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.

இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உங்களைப் போன்ற நிறுவனங்களோடு சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம்.
உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள்.

அதற்கு முன்பாகவே, ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், இந்த அதிநவீன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது மிக மகிழ்ச்சி அளிக்கிறது.

சொல்லப்போனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாகவே, பல நிறுவனங்களோடு துவக்க விழாவை நான் சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறேன்.

உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெறவும், உங்களுடைய திட்டங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!
இந்தத் தொழில் மேலும் சிறப்படைய அனைத்து உதவிகளையும் இந்த அரசு உறுதியாக செய்யும் என்று உறுதி அளித்து, என்னுடைய
உரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம். என பேசினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!