mla_sivasankarஅரசின் கட்டடங்கள் எப்போதுமே தலைவர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் கையால் திறக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தை ஒரு மாணவியின் கரங்களால்,திறந்து வைத்து அழகு பார்த்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், தனது தொகுதியில் நடக்கும் திருமணங்கள், துக்க நிகழ்வுகள் என தொகுதிக்குள் சகஜமாக வலம் வருவார். இப்படி இரண்டு வருடங்களுக்கு முன், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட கொள்ளப்பாடி கிராமத்திற்கு மக்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் கிளம்பும்போது, சார் என ஒரு சிறுமியின் குரல் கேட்டு திரும்பினார். அப்போது 8-ம் வகுப்பு படித்து வந்த செம்பருத்தி என்ற அந்த மாணவி, எம்.எல்.ஏ சிவசங்கரிடம், இங்கு கட்டப்பட்டுள்ள நூலகத்தை யாரும் திறக்கவில்லை. நீங்கள் கொஞ்சம் சொல்லி திறக்க சொல்லுங்க சார் என்ற மாணவி, நூலகத்தின் சாவி வெளியூர்காரர்களிடம் இருக்கிறது. அதனால் நூலகம் பயன்படாமலேயே இருக்கு, திறந்தால் என்னை போல பல மாணவர்கள் படிக்க வசதியாக இருக்கும் என்றும் முறையிட்டுள்ளார்.

இதைப்பற்றி எம்.எல்.ஏ சிவசங்கர் விசாரித்தபோது, அந்த நூலகம் பகுதிநேர நூலகம் என்பதும், தற்போது தனியார் அலுவலகத்தில் செயல்படுவதால் அதை முறையாக திறக்க முடியவில்லை எனவும் தெரியவந்தது. இதனிடையே நூலக மேம்பாட்டுக்காக சிவசங்கர் நிதி ஒதுக்க அந்த நிதி திரும்பி வந்துள்ளது. இந்நிலையில், அடுத்த வருடம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியைக் கொண்டு, அந்த மாணவியின் ஊரான கெளப்பாடியில் கிளை நூலகம் ஒன்றை அமைத்துள்ளார்.

அந்த நூலகம் நேற்று (28-ம் தேதி) திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் எம்.எல்.ஏ சிவசங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள, தங்கள் ஊருக்கு நூலகம் வேண்டும் என கோரிக்கை வைத்த தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியான செம்பருத்தியே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி நூலகத்தை திறந்து வைத்தார். அப்போது நூலகத்தின் கல்வெட்டை செம்பருத்தி திறந்தபோது அதிசயித்து போனார். அந்த கல்வெட்டில், நூலகம் திறப்பாளர்- மாணவி செம்பருத்தி, நூலகம் தங்கள் ஊருக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தவர் என பொறிக்கப்பட்டிருந்தது.

விழாவில், சிவசங்கர் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலரும் பேசிய பிறகு, இறுதியில் பேசிய செம்பருத்தி, தங்கள் ஊருக்கு நூலகம் கேட்ட காரணத்தை விளக்கி, நன்றி கூறினார். அதோடு, வருங்காலத்தில் தான் ஐ.பி.எஸ் அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்வேன் எனக் கூற கூட்டத்தில் கைத்தட்டல் அடங்க பல நிமிடங்கள் ஆனது. மாணவி ஒருவர் தங்கள் ஊருக்கு நூலகம் கொண்டுவர காரணமானதும், ஒரு மாணவியை முன்னிலைப்படுத்தி இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்ட குன்னம் தொகுதி எம்.எல்.ஏ சிவசங்கருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!