Perambalur: Legal awareness camp in Mettupalayam village!
வேப்பந்தட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவும், மறுமலர்ச்சி அறக்கட்டளையும் இணைந்து விழிப்புணர்வு முகாம். மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அம்பேத்கார் தெருவில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தியது.
வேப்பந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியும் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான எஸ்.பி. பர்வத்ராஜ் ஆறுமுகம் தலைமை ஏற்று பேசியதாவது:
சட்டப்பணிகள் ஆணைக்குழு வேப்பந்தட்டையில் துவங்கி கடந்த 4 மாதங்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட பல்வேறு வகையான மனுக்கள் மிகவும் குறுகிய காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆகிய தாங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வங்கிக்கடன், குடும்ப தகராறு, கணவன் மனைவி பிரச்சனைகள், மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமசர முறையில் பேசி முடிப்பதற்கும் சட்ட உதவி மையத்தை நாடலாம்.
எனவே பொதுமக்களாகிய தாங்களும் வேப்பந்தட்டையில் உள்ள வட்டசட்டப்பணிகள் குழுவினை செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் தங்களின் குறைகளை மனுவாக எழுதி மனுவில் ஸ்டாம்ப் ஏதும் ஒட்டாமல் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பினால் இருதரப்பினரையும் அழைத்து விசாரனை செய்து அவர்களின் கோரிக்கைகளை சமரசமாக பேசி முடித்து வைக்கப்படும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.
இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைமை சட்டப்பாதுகாப்பு வழக்கறிஞர் சீராஜ்தீன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சட்டக்கருத்துரை மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் மேட்டுப்பாளையம் கிராம வழக்கறிஞர் கலியபெருமாள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.
முன்னதாக மேட்டுப்பாளையம் ஊராட்சி செயலாளர் (பொ) வி.வெங்கடேஸ்வரி வரவேற்றார். ஊராட்சித் தலைவர் அஞ்சலம் தங்க மவுரியா, உள்பட பலர் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேட்டந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கே.கலைவாணன் செய்திருந்தார். மேட்டுப்பாளையம் மறுமலர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் செல்வராஜ் நன்றி கூறினார்.