பெரம்பலூர்: வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பெண் சிசு பாதுகாப்பினை வலியுறுத்தியும் பெரம்பலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜனநாயகக் கடமையினை ஆற்ற 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலிறுத்தும் வகையிலும், பெண்குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர;வு ஏற்படுத்தும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில நடத்தப்பட்ட மாராத்தான் ஓட்டத்தை இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி முன்னிலையில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சோனல்சந்திரா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த தொடர் மாராத்தான் ஓட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் இருந்து துவங்கி, குரும்பலூர் பாளையம் வரை சென்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் 21.1 கி.மீட்டர் தூர ஓட்டம் மற்றும் 10 கி.மீட்டர் தூர ஓட்டம் என 2 பிரிவாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
மரத்தான் ஓட்டப்போட்டியில் பெண்கள் பிரிவில் 10 கி.மீ தூரம் உள்ள இலக்கை 327 நபர்களும், 21 கி.மீ பிரிவில் 24 நபர்களும், ஆண்கள் பிரிவில் 10 கி.மீ பிரிவில் 1563 நபர்களும், 21 கி.மீ பிரிவில் 334 நபர்களும் என மொத்தம் 2248 நபர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 21 கி.மீ ஆண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த சசிகுமார; முதலிடத்தையும், புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்வாணன் இரண்டாமிடத்தையும், திருச்சியை சேர்ந்த நந்தகுமார் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
10 கி.மீ ஆண்கள் பிரிவில் அரங்கமுத்து முதலிடத்தையும், லிசின் இரண்டாமிடத்தையும், ரஞ்சித்குமார் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான 21 கி.மீ பிரிவில் கீர்த்திகா முதலிடத்தையும், வினிஷா இரண்டாமிடத்தையும், புவனேஸ்வரி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
10கி.மீ பிரிவில் ஜீவிதா முதலிடத்தையும், கீதா இரண்டாமிடத்தையும், கலைமணி மூன்றாம் இடத்ததையும் பெற்றனர்.
இப்போட்டிகளில் முதலாவதாக வந்த ஆண், பெண் இருபாலருக்கும் முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வீதமும்; இரண்டு ஓட்டங்களுக்கும் சேர்த்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.40 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வீதம்; இரண்டு ஓட்டங்களுக்கும் சேர்த்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 ஆயிரமும், மூன்றாவது பரிசாக தலா ரூ.2,500 வீதம்; இரண்டு ஓட்டங்களுக்கும் சேர்த்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரத்தையும் சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
மேலும், இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு பணயதூரத்தை அடைந்தும், வெற்றி வாய்ப்பை இழந்தவற்களுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.