Perambalur : Minister Udhayanidhi visited Eraiyur SIPCOT Industrial Park!

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள எறையூர் சிப்காட் தொழில் பூங்காவினை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தரேஸ் அஹமது, மாவட்ட கலெக்டர் கற்பகம் பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28.11.2022 அன்று எறையூரில் 50 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை தரும் வகையில், ரூ.5,000 கோடி முதலீட்டில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் காலணி பூங்கா அமைக்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் நடைபெற்று வரும் தொழிற்சாலைகளுக்கான கட்டுமானப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜெ.ரபீக் அஹமது கட்டுமானப் பணிகளின் விவரம் குறித்தும், எவ்வளவு காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என்பது குறித்தும், உலக அளவில் எந்தெந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க வர உள்ளார்கள் என்பது குறித்தும், விரைவில் தொழிற்சாலை தொடங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டப்பட்டு 6 மாதத்திற்குள் காலணி தயாரிக்கும் நிறுவனத்திற்கான 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக பெரம்பலூரிலேயே மூலப்பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, காலணிகள் தயாரிக்கப்படவுள்ளது.

கொரியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழில் தொடங்க நிறுவனங்கள் வருகின்றார்கள் நைக், அடிடாஸ், உள்ளிட்ட பெரும் நிறுவனங்களும் பெரம்பலூர் மாவட்டத்தை நோக்கி வருகை தர உள்ளன. 3 வருடத்திற்குள் முழுமையான பணிகள் முடிக்கப்பட்டு இந்தியாவே பெரம்பலூர் மாவட்டத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் தொழிற்சாலை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் போது யூனியன் சேர்மன் ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் மரு.கருணாநிதி, மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!