Perambalur : MP Constituency Election; All arrangements are made for peaceful voting; Collector Information!
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான க.கற்பகம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது, அப்போது அவர் தெரிவித்தாவது:
இந்தியத் திருநாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக கருதப்படும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 19.4.2024 அன்று நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1665 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 56 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 903 வாக்குச்சாவடி மையங்களில் இணையவழி நேரலை ( வாக்குச்சாவடி மையங்களில் 903 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில், இணையவழி நேரலை (Live Web Streaming) செய்திட வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று 8,290 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் 5,216 நபர்களுக்கு EDC எனப்படும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை பெற்றவர்கள் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி மையத்திலேயே வாக்களிக்கலாம். 4,212 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன, இன்றும் நாளையும் (18.04.2024) தபால் வாக்குகளை செலுத்துவதற்கான மையம் பயன்பாட்டில் இருக்கும்.
பெரம்பலூர் பராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 7,01,400 ஆண் வாக்காளர்களும், 7,44,807 பெண் வாக்காளர்களும், 145 இதர வாக்காளர்களும் என மொத்தம் 14,46,352 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக 35 புகார்களும், சி.விஜில் செயலி மூலம் 25 புகார்களும் பெறப்பட்டு அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடத்தை விதிகளை மீறியதாக பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
நேற்று வரை பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுவினர் ரூ.1,17,37,451 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், ரூ.1,07,33,851 உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையமும், டோம்னிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் வாக்குச்சாவடி மையமும், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இளைஞர்களுக்கான வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
குன்னம் சட்டமன்றத் தொகுதியில், பெரியம்மாபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையமும், மேலமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகளிர் வாக்குச்சாவடி மையமும், மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இளைஞர்களுக்கான வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பில் இருந்து கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய நடத்தை விதிகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், தேர்தல் நாளுக்கு 72 மணிநேரம் முன்னதாக, ஒவ்வொரு வேட்பாளருக்கும் வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும், முதன்மை முகவர் பயன்பாட்டிற்கும் ஒரு வாகனமும், வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அனுமதி கோரும்பட்சத்தில் அக்கட்சியினை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்திட ஏதுவாக ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மேற்படி வாகனத்திற்கான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும்.
வாக்குப்பதிவு முடியும் வரை இனம், மதம், மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. தனிநபரை பாதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது. மொத்தமாக குறுந்தகவல்கள் (Bulk SMS) அனுப்புவதோ மற்றும் குரல் பதிவுகள் (Voice Message ) அனுப்புவதோ கூடாது.
மேலும், தேர்தல் நாளுக்கு 48 மணிநேரம் முன்னதாக, அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதை நிறுத்திட வேண்டும். அதாவது 17.04.2024 அன்று மாலை 06.00 மணியுடன் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.
வெளியூரிலிருந்து பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய பாராளுமன்ற தொகுதியில் வாக்குரிமை இல்லாதவர்கள் தொடர்ந்து இப்பாராளுமன்ற தொகுதியில் இருக்க அனுமதியில்லை. 5 நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதியில்லை. மூன்றாவது முறையாக வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்தான விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சியில் 17.04.2024க்குள் அளித்து அதுதொடர்பான தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபால 24 மணிநேரம் முன்னதாக அனைத்து வேட்டாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதாக இருப்பின், ஊடகச்சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினரிடம் (MCMC) 48 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும். உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை.
தேர்தல் நாளன்று (19.04.2024) வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அவரது பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஓட்டுநர் உள்பட ஐந்து பேருக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு. வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் வேறு நபர்கள் செல்ல அனுமதி இல்லை. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகனத்தில் தெளிவாக தெரியும்படி ஒட்டப்பட வேண்டும். மேற்கண்டுள்ள அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி செல்ல கூடாது.
வாக்காளரை வாக்களித்திட வாக்காளரின் இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கோ, வாக்குச்சாவடியிலிருந்து இருப்பிடத்திற்கோ வேட்பாளரோ அல்லது முகவரோ அழைத்து செல்ல வாகன வசதி ஏற்படுத்தி தரக்கூடாது. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிப்பெருக்கி மற்றும் Mega phones பயன்படுத்தக்கூடாது. ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவர். தேர்தல் நாளன்று பிற்பகல் 03.00 மணிக்கு முகவர்கள் மாற்ற செய்ய அனுமதியில்லை உள்ளிட்ட நடத்தை விதிமுறைகள் அலுவலர்கள் நன்கு தெரிந்துகொண்டு அதனை முறையாக செயல்படுத்த வேண்டும்.
நம் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாக்காளர்களும் தவறாது தங்கள் வாக்கை செலுத்தி பொதுத்தேர்தல் அமைதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையாகவும் நடைபெற அனைவரும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.