Perambalur MP Election: Training for micro observers!
பெரம்பலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவினை கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு, தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கற்பகம், தலைமையில் , தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசியதாவது:
இந்திய நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான கருதப்படும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததை எண்ணி நீங்கள் பெருமைப்பட வேண்டும். பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவை கண்காணிக்கும் பொறுப்புமிக்க பணியில் நீங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளீர்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாக்குப்பதிவு மையங்களில் முறையாக பின்பற்றப்படுகின்றதா, எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, பிரச்சனைகள் ஏதுமின்றி அமைதியான முறையில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுகின்றதா என்பதை தேர்தல் நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். அந்த பொறுப்பை உணர்ந்து மிகவும் கவனமாக நீங்கள் செயல்பட வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் வகையில், ஏதேனும் சம்பவங்கள் நடந்தாலோ, அசம்பாவிதங்கள் நடந்தாலோ அதுகுறித்து உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கோ, தேர்தல் பொதுப் பார்வையாளருக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் அமைதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையான முறையிலும் நடைபெற உங்கள் ஒவ்வொருவரின் முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.