Perambalur: New Bus Depot at Kunnam; Minister Sivashankar visited!

குன்னத்தில் புதிய பஸ் டெப்போ அமையவுள்ள இடத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110 கீழ் குன்னம் பகுதியில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில் போக்குவரத்துத்துறையின் கீழ் புதிய பணிமனை அமைக்கப்படவுள்ள இடத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் நகரை ஒட்டி அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், சார்பு நீதிமன்றம், கால்நடை மருத்துவமனை, அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகியவைகள் உள்ளதாலும் இவ்வலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பேருந்தில் சென்று வர ஏதுவாக குன்னம் தொகுதியில் புதிதாக ஒரு தனி பணிமனை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் குன்னம் நகரில் புதிய பேருந்து பணிமனை அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து பழைய குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படவுள்ளது.

இந்த இடத்தினை பார்வையிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இடத்தை விரைவில் சுத்தம் செய்து, பேருந்துகள் வந்து செல்ல ஏதுவான சாலை வசதி, பேருந்துகளை நிறுத்துவதற்கான கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வெடுக்கும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை விரைந்து முடிக்க வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, முன்னாள் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், மதியழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!