Perambalur: New bus depot at Kunnam; Transport Minister S.S. Sivashankar started!
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மானிய கோரிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) திருச்சி மண்டல இயக்கப் பகுதியில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு கூடுதலாக பேருந்து வசதி செய்யும் வகையில், குன்னம் பகுதியில் புதிய பேருந்து பணிமனையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, தலைமையில், கலெக்டர் கே.கற்பகம் முன்னிலையில் நேற்று (14.03.2024) திறந்து வைத்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு சிறப்பான வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொகுதிகளிலும் பணிமனை அமையாமல் உள்ளது. இன்னும் சில பெரிய தொகுதிகளில் பணிமனை கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. ஆனால் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு இந்த தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான வாய்ப்பை வழங்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மிக முக்கியமான பத்து கோரிக்கைகள் சேகரிக்கப்பட்டு அதில் மிக முக்கியமான கோரிக்கைகள் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். குன்னம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை முதன்மை கோரிக்கையாக புதிய பேருந்து பணிமனை வேண்டும் என கேட்கப்பட்டது. இந்த பணிமனை அமைந்தால் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இருக்கும் குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி பரவலாக கொண்டு சேர்க்க முடியும். ஒரு சில கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் இருந்தாலும் பள்ளி கல்லூரி பயிலும் மாணவர்கள் சென்று வருவதற்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க இயலும். குன்னம் பகுதி மக்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ள வாய்ப்பு தான் இந்த புதிய பேருந்து பணிமனை.
இரண்டாவது முக்கிய கோரிக்கையாக இந்த பகுதியில் மக்காச்சோளத்தின் விலை குறைவாக இருப்பதால் அதன் மதிப்பு கூட்டப்பட்டு விற்பனை செய்யும் வகையில் இந்த ஆண்டே தொழில் நிறுவனம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். மேலும் கூட்டுக் குடிநீர் திட்டம் தேவை என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் அடிப்படை பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாய்ப்பு கொடுத்துள்ளதால் தான் இது போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தப் பேருந்து பணிமனை அமைப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாக திட்டமிட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நாள் என் வாழ்க்கையில் ஒரு பொன்னாள்.
குன்னம் சட்டமன்ற தொகுதி மிகவும் பின் தங்கிய தொகுதி. முழுவதும் கிராமங்கள் நிறைந்த பகுதி. இந்தத் தொகுதி முன்னேறுவதற்கு வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களோடு நெருக்கமாக பணியாற்றுகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு முன்னேறிச் செல்லும் நோக்கத்தில் அமைச்சர் பெருமக்களும் பயணம் செய்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குன்னம் சட்டமன்ற தொகுதியிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என பேசினார்.
அதனைத் தொடர்ந்து பணி காலத்தில் இறந்த பணியாளர்களின் 40 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 25 ஆண்டுகள் / 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லா பேருந்து இயக்கம் செய்த 29 ஓட்டுநர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும் வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் 10 புதிய பேருந்து வசதிகளையும் தொடங்கி வைத்தார்.
போலீஸ் எஸ்.பி ஷ்யாம்ளாதேவி, எம்.எல்.ஏக்கள் ம.பிரபாகரன் (பெரம்பலூர்), கு.சின்னப்பா (அரியலூர்), கா.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), யூனியன் சேர்மன்கள் ஊராட்சி யூனியன் சேர்மன்கள் ந.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் ஜாஹிர் உசேன் (லெப்பைக்குடிக்காடு), மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாநிதி, சாலை போக்குவரத்து நிறுவன உதவி இயக்குநர் (சென்னை) ச.சக்திவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளர் அ.முத்துகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(லிட்) பெரம்பலூர் கோட்ட மேலாளர் ராமநாதன், முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம், குன்னம் ஊராட்சித் தலைவர் தனலட்சுமி மதியழகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.