Perambalur: Pre-arrangement work at the counting center: Election Officer inspection!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் தொடர்பான பணிகள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கற்பகம், போலீஸ் எஸ்.பி ஷ்யாம்ளாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி பெரம்பலூர், துறையூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். எனவே, வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள், தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் உள்ளிட்ட வசதிகள் குறித்தும், அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் விரிவாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரும் வாகனங்கள் முறையாக உள்ளே வந்து வெளியேறுவதற்கு ஏதுவான வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
சார் ஆட்சியர் கோகுல், டிஎஸ்.பி பழனிசாமி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் அருளானந்தம், பெரம்பலூர் தாசில்தார் சரவணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கவிதா மற்றும் பலர் உடனிருந்தனர்.