Perambalur : Publication of polling station draft list for public viewing; Collector Notice!
எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற பொது தேர்தல்கள்-2024 முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 332 வாக்குச்சாவடி மையங்களிலும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 320 வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ளது.
வாக்காளர்களின் எண்ணிக்கையினை (ஊரக பகுதியில்/ நகரப்பகுதியில் 1500) கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளை பிரித்தல்/ வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ளவை / பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பணிகள் கடந்த 20.02.2024 முதல் சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டன.
அவ்வாறு தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையங்களின் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 11.03.2024 அன்று மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் வரைவு பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர்/சார் ஆட்சியர், பெரம்பலூர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வாக்குச்சாவடி மையங்கள் குறித்த பட்டியல் பொது மக்களின் பார்வைக்காக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் /சார் ஆட்சியர் அலுவலகம், மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் மேற்படி வரைவு அறிக்கையானது பின்வரும் பெரம்பலூர் மாவட்ட அரசு வலைதளத்தில் www.perambalur.nic.in பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள்/அரசியல் கட்சியினர் தங்களது கூற்று மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் 14.03.2024 -க்குள் எழுத்து மூலமாக சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் தெரிவித்துக்கொள்ளலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.