Perambalur: Rs. 2.62 crores of work was initiated by Minister Sivashankar!
போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.62 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
ஜெமீன்ஆத்தூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டும் பணி, புஜங்கராயநல்லூரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, கூத்தூர் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இலந்தங்குழி ஊராட்சி சீராநத்தம் தனவேல் வீடு அருகில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, அல்லிநகரம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, மேலமாத்தூர் ஊராட்சி பி.சி. தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, ஆதனூர் ஊராட்சி மதுராகுடிக்காடு கிராமத்தில் ரூ.7.4 லட்சம் மதிப்பீட்டில் பால்பண்ணை முதல் அங்கன்வாடி வரை தார்சாலை அமைக்கும் பணி, கொளக்காநத்தம் ஊராட்சி வன்னிமரம் அருகில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி என சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.51.4 லட்சம் மதிப்பீட்டில் 8 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா(2022-23) நிதியின் கீழ் ரூ.30.33 லட்சம் மதிப்பீட்டில் ஜெமீன்ஆத்தூர்-அரியலூர் சாலை தார்சாலை அமைக்கும் பணி, கொளக்காநத்தம் ஊராட்சி எஸ்.சி. தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய காலனியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி என பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 6 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் கீழமாத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டடத்தின்கீழ் ரூ.25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் , சாத்தனூர் ஊராட்சியில் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டிய கிராம செயலகம் மற்றும் கொளக்காநத்தம் ஊராட்சி நபார்டு திட்டம் மூலம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் உள்ளிட்டவைகள் என மொத்தம் ரூ. 1.03 கோடி மதிப்பீட்டில் 3 பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஆலத்தூர் ஊராட்சி யூனியன் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் என்.ராகவன், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி, வேளாண் துறை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.