Perambalur: Rules of Conduct 72 Hours Before Election Day for MP Elections; Collector Notice!

தேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான விளக்கக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கற்கம் தெரிவித்ததாவது

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக கருதப்படும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 19.4.2024 அன்று நடைபெறவுள்ளது. இதில் உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு மிக்க பணியும் இன்றியமையாதது.

தேர்தல் நாளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பில் இருந்து கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய நடத்தை விதிகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், தேர்தல் நாளுக்கு 72 மணிநேரம் முன்னதாக, ஒவ்வொரு வேட்பாளருக்கும் வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும், முதன்மை முகவர் பயன்பாட்டிற்கும் ஒரு வாகனமும், வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அனுமதி கோரும்பட்சத்தில் அக்கட்சியினை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்திட ஏதுவாக ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மேற்படி வாகனத்திற்கான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும்.

வாக்குப்பதிவு முடியும் வரை இனம், மதம், மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. தனிநபரை பாதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது. மொத்தமாக குறுந்தகவல்கள் (Bulk SMS) அனுப்புவதோ மற்றும் குரல் பதிவுகள் (Voice Message ) அனுப்புவதோ கூடாது.

மேலும் தேர்தல் நாளுக்கு 48 மணிநேரம் முன்னதாக, அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதை நிறுத்திட வேண்டும். அதாவது 17.04.2024 அன்று மாலை 06.00 மணியுடன் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.

வெளியூரிலிருந்து பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய பாராளுமன்ற தொகுதியில் வாக்குரிமை இல்லாதவர்கள் தொடந்து இப்பாராளுமன்ற தொகுதியில் இருக்க அனுமதியில்லை. 5 நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதியில்லை. மூன்றாவது முறையாக வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்தான விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் 17.04.2024க்குள் அளித்து அதுதொடர்பான தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபால 24 மணிநேரம் முன்னதாக அனைத்து வேட்டாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்வதாக இருப்பின், ஊடகச்சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினரிடம் (MCMC) 48 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும். உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை.

தேர்தல் நாளன்று (19.04.2024) வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அவரது பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஓட்டுநர் உள்பட ஐந்து பேருக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு. வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் வேறு நபர்கள் செல்ல அனுமதி இல்லை. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகனத்தில் தெளிவாக தெரியும்படி ஒட்டப்பட வேண்டும். மேற்கண்டுள்ள அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி செல்ல கூடாது.

வாக்காளரை வாக்களித்திட வாக்காளரின் இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கோ, வாக்குச்சாவடியிலிருந்து இருப்பிடத்திற்கோ வேட்பாளரோ அல்லது முகவரோ அழைத்து செல்ல வாகன வசதி ஏற்படுத்தி தரக்கூடாது. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிப்பெருக்கி மற்றும் Mega phones பயன்படுத்தக்கூடாது. ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவர். தேர்தல் நாளன்று பிற்பகல் 03.00 மணிக்கு முகவர்கள் மாற்ற செய்ய அனுமதியில்லை உள்ளிட்ட நடத்தை விதிமுறைகள் அலுவலர்கள் நன்கு தெரிந்துகொண்டு அதனை முறையாக செயல்படுத்த வேண்டும்.

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் அமைதியாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும் நடைபெற அனைவரும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும், என தெரிவித்துள்ளார். இதில் திரளான தேர்தல் பணியாளர்கள்பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!