Perambalur : Sewage near drinking water; BDO, Panchayat Clerk suspended; Action against panchayat Presidents: Collector’s order!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பா நகர் பகுதியில் டெங்கு நோய் காய்ச்சலால் இருவர் உயிரிழந்ததாக அண்மையில் உண்மைக்கு மாறான செய்திகள் பரவலாக வெளிவருகின்றன.
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வி.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பா நகரில் 184 குடும்பங்கள் வசிக்கின்றனர். 01.03.2024 மற்றும் 04.03.2024 ஆகிய நாட்களில், இப்பகுதியிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வரப்பெற்றதைத் தொடர்ந்து, பொது சுகாதாரத் துறை மருத்துவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆகியோர்களை ஆய்வு செய்திட உத்தரவிடப்பட்டது. அதில், இப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றிற்கு அருகே கழிவு நீர் செல்வதை கண்டறிந்து, இக்குடிநீர் ஆதாரத்திற்கு சற்று தள்ளி அருகே தேங்கியிருந்துள்ள கழிவு நீர் கசிந்திருக்க வாய்ப்புள்ளதால் அதிலிருந்து குடிநீர் விநியோகம் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் பொது சுகாதாரத் துறையினர் மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் காய்ச்சல் கண்டறியப்பட்ட நபர்களுக்கு, அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பின் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் கொசுக்களால் பரவுகின்றதே தவிர தண்ணீரால் அல்ல.
இதில், மேற்படி கிராமத்தைச்சேர்ந்த இருவர் சமீபத்தில் இறந்துள்ளனர். ஒருவருக்கு வலிப்பு நோய் இருந்து அவர் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாததும், மற்றொருவருக்கு பிட்யூட்டரி பிரச்சனைக்கு உரிய தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாததுமே காரணமாகும். அவர்கள் இறந்ததற்கு குடிநீரோ அல்லது டெங்கு போன்ற காய்ச்சலோ காரணம் அல்ல என மருத்துவ வல்லுநர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.
எனினும், இந்த நிகழ்வில், பொது குடிநீர் ஆதாரம் அருகே கழிவு நீர் செல்வதை கண்காணிக்கத் தவறியமைக்கு வி.களத்தூர் கிராம ஊராட்சியின் ஊராட்சி செயலாளர், அப்பகுதியின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்கள் 12.03.2024 முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும துணைத் தலைவர் ஆகியோர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 205 மற்றும் 206 இன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே மர்மக் காய்ச்சல் பரவுகின்றது என்றோ, அதனால் உயிரழப்பு ஏற்படுகின்றது என்றோ தவறான கருத்தை பொதுவெளியில் பரப்பி பொதுமக்களை அச்சதுக்குள்ளாக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.