தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் சிறுவாச்சூரில் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மதி அங்காடியினை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று திறந்து வைத்தார்.
மதி அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், சிறுவாச்சூர் ஊராட்சியை சேர்ந்த அன்னை மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த அங்காடியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் பிற மாவட்டங்களான தஞ்சாவூர், தூத்துக்குடி, கரூர், திருச்சி, திருவாரூர், நீலகிரி, விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினரால் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக்குழுவினரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் மதி அங்காடியின் மூலம் பொருட்களை வாங்கிப் பயன்பெறவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தால் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, புதுவாழ்வுத் திட்ட மேலாளர் எஸ்.ரூபவேல், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தகோ.ஆலயமணி, சிறுவாச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் அ.சிவகாமி உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்