Perambalur: Study meeting on the progress work to conduct the Group-IV examination well!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி -IV தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
தொகுதி -IV தேர்வு 09.06.2024 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தேர்வு பெரம்பலூர் வட்டத்தில் 41 மையங்களும், ஆலத்தூர் வட்டத்தில் 4 மையங்களும், குன்னம் வட்டத்தில் 8 மையங்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 8 மையங்களும் என மொத்தம் 61 மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பெரம்பலூர் வட்டத்தில் 12,597 நபர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 1077 நபர்களும்,, குன்னம் வட்டத்தில் 2234 நபர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 2261 நபர்களும், என மொத்தம் 18,169 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க 6 பறக்கும் படைகளும், 30 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 61 தேர்வு மையங்களிலும் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும்.
தேர்விற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மாவட்ட கருவூலத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தேர்வு நாளன்று உரிய நேரத்தில், வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை வழங்கிடவும், தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள்களை மீண்டும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து, தேர்வாணையத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கருவூல அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு மையங்களில் சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் தேர்வு மையங்களில் இருக்க வேண்டும், தீயணைப்புத்துறையின் சார்பில் தீதடுப்பு முன்னெச்சரிக்கைக்காக பாதுகாப்பு குழுவினர் இருக்க வேண்டும். தேர்வு நடைபெறும் நாளன்று அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்வு நாளன்று அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வர்கள் எளிதில் சென்று சேரும் வகையில் போதிய பேருந்து வசதிகள் இருக்கும் வகையில் ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்திட வேண்டும்.
தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க பெரம்பலூர் வட்டத்திற்கு சார் ஆட்சியர், சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர்(உள்கட்டமைப்பு) ஆகியோரும், ஆலத்தூர் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரும், குன்னம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நடமாடும் குழுவினர் 09.06.2024 அன்று காலை 6 மணிக்கு மாவட்ட கருவூலத்திற்கு வருகை தந்து, தேர்விற்கான பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச்சென்று உரிய நேரத்திற்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரிடம் வழங்கி வேண்டும். அதேபோல, தேர்வு முடிந்தபின்விடைத்தாள்களை அந்தந்த மையங்களில் இருந்து பெற்று மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும். தேர்விற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை முறையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி -IV தேர்வினை சிறப்பாக நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வருவாய் துறையினர் மற்றும் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.