பெரம்பலூர் : உலக வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பின்விளைவுகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில் மார்ச் 1ஆம் தேதி இருசக்கர வாகனப் பிரச்சாரம் சென்னையில தொடங்கிய பேரணி வருகிற 10 ம்தேதி கன்னியாகுமரில் முடிவடைகிறது.
அதையொட்டி நேற்று பெரம்பலூரில் நடைபெற்ற வாகனப் பிரச்சாரப் பயணத்தை தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
உலக வர்த்தகம் இந்தியாவுக்கு எதிரான ஒப்பந்தம். அது தேசத்திற்கு எதிரானது. சட்டத்திற்கு எதிரானது மக்களுக்கு எதிரானது. இந்த ஒப்பந்தத்திற்குத் துணைபோகும் அனைவரும் தேசத் துரோகிகளாவர்.
வணிகர்களின் வாழ்வுரிமையான சில்லரை வணிகத்தை சீரழித்து அந்நியர் வணிகத்தை இந்தியாவில் வலுப்படுத்துவதுதான் உலக வர்த்தக ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தால் விவசாயம் சீரழிகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் நசுக்கப்படுகிறது. சில்லரை வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நிய நிறுவனங்கள் அந்நிய உற்பத்திப் பொருட்கள் இந்தியாவிற்குள் உள்ளேபுகுந்து நாட்டையே சீரழித்து வருகிறது.
இதுவரை உலகவர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்க மத்திய மாநிலஅரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த அரசியல்கட்சிகளும் முன்வரவில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிப்போம் என உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவளித்து வாக்களிக்கும். இல்லாவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிப்பது குறித்து சங்கப்பேரவை முடிவெடுக்கும் என்றார்.
பேட்டியின்போது பேரவையின் மாநில துணைத்தலைவர் ஏ.கே.வி. சண்முகநாதன் மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன் ராதாகிருஷ்ணன் ரவிசுந்தரம் அஸ்வின்ஸ் கணேசன், வசந்தம்ரவி, சிவக்குமார், அரும்பாவூர் ஜெகநாதன், சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.