Perambalur: The training for counting officers was conducted under the leadership of the Collector
பெரம்பலூர் எம்.பி தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
அப்போது அவர் தெரிவித்ததாவது: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024ல், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.06.2024 அன்று ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், சட்டமன்றத்தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அலுவலர்களைத் தேர்வு செய்யும் பணி (second Randomisation) மேற்கொள்ளப்படும்.
வாக்கு எண்ணும் நாளான 04.06.2024 அன்று அதிகாலை 5.00 மணியளவில், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் மேசைவாரியாக வாக்கு எண்ணும் அலுவலர்களைத் தேர்வு செய்யும் பணி (Third Randomisation) மேற்கொள்ளப்பட வேண்டும். இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணும் மையத்திலுள்ள அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஓவ்வொரு மேசைக்கும் வாக்குகளை எண்ணும் மேற்பார்வையாளர் (Counting Supervisor) ஒருவர், வாக்குகளை எண்ணும் உதவியாளர் (Counting Assistant) ஒருவர் மற்றும் நுண் பார்வையாளர் (Micro Observer) ஆகியோரும், கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வந்து மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேசைக்கும் ஒரு அலுவலக உதவியாளர் (அல்லது) கிராம உதவியாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பர்.
வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேசையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் முறையாக உள்ளதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கைகாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கருவிகள் சுற்றுவாரியாக வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காலை 7.55 மணியளவில், தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் அனைவரும் வாக்குப் பதிவின் இரகசியம் தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும்.
முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி காலை 8.00 மணிக்குத் துவங்கும். தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமான பிறகு, அரைமணி நேரம் கழித்து காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கும். வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேசைக்கும், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் படிவம்-17சி அடங்கிய உறை ஆகியவை மட்டும் சுற்றுவாரியாக வழங்கப்படும்.
சுற்றுவாரியாக வழங்கப்படும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தங்களது மேசைக்கு உரியவைதானா என்பதை வாக்கு எண்ணும் அலுவலர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு இயந்திரம் அடங்கிய பெட்டி மேசைக்கு வரப்பெற்றவுடன், ஏற்கனவே சீல்கள் வைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்க வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை அனுமதிக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் பணியின் போது கண்காணிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய இதுபோன்ற பல்வேறு தகவல்களை இன்றைய பயிற்சி வகுப்பில் உங்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார்கள். அதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சுந்தரராமன் வாக்கு எண்ணும் பணியின் போது செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எவ்வாறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள வேண்டும், வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும், தபால் வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும் என்பது குறித்து விரிவாக பயிற்சி வகுப்பினை நடத்தினார். மேலும், இதற்கு முன்னர் பல்வேறு தேர்தல்களில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணிகளில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், அந்த சூழலை எதிர்கொண்ட விதம், அப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் பராளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட6 சட்டமன்றத் தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.