Perambalur: There are tanks, people are suffering due to lack of water!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வி களத்தூர் கிராமத்தில் உள்ளது ராயப்பா நகர். அங்கு சுமார் 154 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குடியிருப்புகள் அருகே வெள்ளாறும் பாய்ந்து ஓடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைவான ஆழத்தில் இருந்தும், அப்பகுதியில் உள்ள போர்வெல் மற்றும் கிராம பைப் லைன்கள் முறையாக பாராமரிக்காததால், தண்ணீர் வசதி இருந்தும் ராயப்பன் நகரில் வசிக்கும் மக்கள் குடிக்கவும், பிற பயன்பாடுகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
மேலும், தண்ணீர் வினியோகம் முற்றிலும் தடைப்ப்பட்டுள்ளதால் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து வேப்பந்தட்டை பீடிஓ உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலரிடம் முறையிட்டும் எந்தவிதமான பலனும் அளிக்காததால் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தண்ணீரின் அதிகமாகி உள்ளது. ஆனால், அப்பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பில், 1000 லிட்டர் திறன் கொண்ட ஆர்.ஓ. வாட்டர் சிஸ்டம் அமைப்பட்டுள்ளது. ஆனால், இயங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு மின் இணைப்பு இருந்து பைப் லைனில் இருந்து துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.
ஏற்கனவே, வி.களத்தூரில் வெளியேறும் கழிவு நீரை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கும் காலனி மக்களுக்கு அடுத்த சிரமமாக அடிப்படை தேவைக்கு கூட போதுமான தண்ணீர் கிடைக்காததால் பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள அருகிலுள்ள விவசாய ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீண்ட தூரம் சென்று எடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் தூங்கி எடுத்துக் கொண்டிருக்கும் ஊராட்சி நிர்வாகத்தை தட்டி எழுப்ப வேண்டும் என்றும், ராயப்பா நகர் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.