மாமூல் கேட்டு மிரட்டுவதாக மக்கள் நீதி பேரவை நிர்வாகி மீது பெரம்பலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்., நந்தகுமார் மற்றும் எஸ்பி., சோனல்சந்திரா ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.ரவி, மாவட்ட செயலாளர் பி.முத்துகுமார், மாவட்ட பொருளாளர் ஆர்.சிவக்குமார், கொளரவ தலைவர் கே.ஆர்.வி.கணேசன், நகரத்தலைவர் செல்லப்பிள்ளை மற்றும் நிர்வாகிகள் சுந்தரம், செல்வராஜ், அருண், ராமசுப்பு ஆகியோர் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், செட்டிகுளம், அம்மாபளையம், அரும்பாவூர், பூலாம்பாடி, வேப்பந்தட்டை, குன்னம், வி.களத்தூர், லெப்பைக்குடிக்காடு, வாலிகண்டபுரம், வேப்பூர் மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஹோட்டல்கள், டிபன் சென்டர்கள், மெஸ், தங்கும் விடுதிகள், டீ கடைகள், ஸ்நாக்ஸ் சென்டர்கள் மற்றும் பேக்கரி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்கள் நீதிப்பேரவையின் நிறுவனர் ஆதிதமிழ்செல்வன் என்பவர் நாங்கள் நடத்தி வரும் மேற்கண்ட கடைகளில் அவரது நண்பர்கள் சிலருடன் நேரில் வந்து மாதம் மாதம் எங்களுக்கு மாமூல் தர வேண்டும்.
அப்படி தராவிட்டால் நீங்கள் தயாரித்து வழங்கும் உணவு பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்து உங்கள் நிறுவனத்தில் பெயரை கெடுத்து வியாபாரம் பாதிக்கும் படி செய்து விடுவோம் என்று அடிக்கடி மிரட்டி வருகின்றார்.
எனவே மேற்கண்ட நபர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை மேற்கொண்டு, எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடும் படிகேட்டுக்கொள்கிறோம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் அளித்த புகார் மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இதுபற்றி விசாரணை நடத்தி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.