Perambalur: Training for volunteers to help differently-abled, elderly people come to vote!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் சக்கர நாற்காலிகளை இயக்கும் 144 தன்னார்வல மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், நடக்க இயலாத நிலையில் உள்ள அவர்களை சக்கர நற்காலியில் அமர வைத்து வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்துச் செல்லவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் யுவகேந்திரா தொண்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் இருந்து 144 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த தன்னார்வலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் விதிகளுக்குட்பட்டு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், தன்னார்வலர்களின் பணியின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக அனைவருக்கும் எடுத்துரைத்த கலெக்டர் கற்பகம், இளம் வாக்காளர்களாகிய நீங்கள் தவறாது உங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்த உங்கள் பெற்றோர், உறவினர்கள் நண்பர்களையும் தவறாது வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் 2024 குறித்து பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவினை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கையெழுத்து பலகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டார். இதேபோன்று குன்னம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள தன்னார்வலர்களுக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.