Perambalur: “Unkalai Thedi Ungal Vuril” project is going on in Aladhur Union : Collector notice!
மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவார்கள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் ஜூன்-2024 ஆம் மாத்திற்கு 19.06.2024 அன்று ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் அனைத்துத்துறைகளின் முதல்நிலை அலுவலர்களும் 24 மணி நேரம் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மகளிர் திட்ட இயக்குநர், வேளாண்மை, கால்நடை, சுகாதார சேவைகள் துறைகளின் இணை இயக்குனர்கள், நெடுஞ்சாலை, பொது சுகாதார துணை இயக்குனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், ஊராட்சி துறை உதவி இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் என அனைத்து மாவட்ட நிலையிலான அலுவலர்களுக்கும் ஒரு கிராமம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர்/ ஊராட்சி செயலருடன் தொடர்பு கொண்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமத்தில் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் விவரங்கள் பெற்றுக் கொண்டு, அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் திடீர் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்திட வேண்டும். கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் / பணிகள் விவரங்கள் பெற்று ஆய்வு செய்திட வேண்டும்.
பிற்பகல் 02.30 முதல் 04.30 வரை ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில், அன்றைய தினம் செய்யப்பட்ட ஆய்வுகளின் குறிப்புகள் அடங்கிய அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மாலை 04.00 முதல் 06.00 வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமத்திற்கு சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடி கிராமத்திற்கு தேவைப்படும் பொது கோரிக்கைகள் குறித்து விவரங்கள் பெறப்பட வேண்டும்.
மாலை 06.00 மணிக்கு மேல் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நூலகங்கள், அரசு நல மையங்கள், அரசு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் தெருவிளக்குகள் பயன்பாடு ஆய்வு செய்திட வேண்டும். இரவு அக்கிராமத்தில் தங்கிட வேண்டும்.
இரண்டாம் நாள் காலை 06.00 முதல் 09.00 வரை : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கிராமத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் ஆகியன ஆய்வு செய்திட வேண்டும்.
பின்னர் தலைமையிடம் திரும்பி தங்களின் ஆய்வு குறித்த முழுவிபர அறிக்கையினை தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஆய்வு அறிக்கையினை சமர்பித்திட வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.