Perambalur: What is happening is not an election! 2nd Freedom Struggle:; VCK President Thol. Thirumavalavan speech!!


சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அப்போது அவர் பேசியது:

தற்போது நடைபெறும் மக்களவை தேர்தல் இரண்டாம் சுதந்திர போர். ஆங்கிலேயரை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் நடைபெற்றது முதலாம் சுதந்திரப் போராட்டம். தற்போது கொடிய சக்திகளான மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி ஆகிய சங் பரிவார் கும்பலை எதிர்த்து நடைபெறுகிறது இரண்டாம் சுதந்திரப் போர். தற்போது அரசியல் எதிரிகளாக அதிமுகவையோ, பாமகவையோ முன்னிறுத்தி விமர்சனம் செய்யவில்லை.

மக்களின், எதிரியான பாஜகவினை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தி ஆக வேண்டும். மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவோடு திமுக இணக்கமாக இருந்திருந்தால் எந்தவித நெருக்கடியும் வந்து இருக்காது. அமைச்சர்கள் மீது எவ்வித வழக்குகளும் பாய்ந்திருக்காது. ஆனால் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சமூக நீதியை காப்பாற்றிட வேண்டும். அதற்காக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை ஒற்றுமையுடன் சந்தித்து வருகிறோம். சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையோடு உறுதியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.

அதிமுக கூட்டணி கொள்கை இல்லாமல் கூட்டணி சேர்ந்ததால் தற்போது இரண்டாக பிரிந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதியை பாஜக அரசு குறைத்து வருகிறது. காந்தியின் பெயரால் உள்ள திட்டம் என்றாலே பிஜேபி கட்சிக்கு அறவே பிடிக்காது. கோட்சே, வீர சாவர்க்கர் ஆகியோரை பிஜேபி யினர் தியாகிகளாக கொண்டாடி வருகின்றனர். வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடியவர்களை பிஜேபி அரசு காப்பாற்றி ரூ. 25 லட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு இருக்காது. ரேஷன் கடை இருக்காது. எனவே, இந்தியா கூட்டணியின் சின்னமான பானை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

இவருடன் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விசிக கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவேரா, துணை, பொதுச்செயலாளர் கனியமுதன் மாவட்ட செயலாளர், கலையரசன் மாவட்ட செய்தித் தொடர்பாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர் இளமாறன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மேலிடப் பொறுப்பாளர் கிட்டு
ஆலத்தூர் ஒன்றிய மேலிடப் பொறுப்பாளர் தங்கதுரை, திமுக கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவசங்கர், சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், அன்புச்செல்வன், விவசாய அணி துணை அமைப்பாளர் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள கொளக்காநத்தம், கொளத்தூர், கூத்தனூர், ஆதனூர், மேலமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருமாவளவன் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்குகளை சேகரித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!