தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் – அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.
வரும் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நந்தகுமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடிகளை அகற்றிவிட வேண்டும்.
அனுமதி பெறாத வாகனங்களில் கட்சிக்கொடிகள் இருப்பது கண்டறிப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அங்கிகரிக்கப்படாத அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ரீதியிலான அமைப்புகளின் கொடிகள் மற்றும் கொடி கம்பங்கள் உடனடியாக மறைக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டும்.
அவ்வாறு தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மீது காவல் துறையினர் மூலம் சட்டத்திற்குட்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும்.
அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஊர்வலம் மற்றும் வாகன அனுமதி பெற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பித்து, அனுமதி கடிதங்களை பெறலாம்.
இதில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பொதுக்கூட்டம் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரசியல் கட்சியினர் தனியார் இடங்களில் கட்சி அலுவலகங்களை அமைப்பதற்கும் உரிய அனுமதி பெற வேண்டும்.
என பேசினார்.
இதற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கான வாகன அனுமதி, பிரச்சார கூட்டத்திற்கான அனுமதிகளை இணையதளத்தின் வாயிலாக எவ்வாறு விண்ணப்பித்து அதற்கான ஆணைகளை பெறுவது குறித்து செயல் விளக்கங்கள் அரசியல் கட்சியினருக்கு காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.