பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகே நன்னை கிராமத்தில் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த இடத்தை தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்துகளை இன்று சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
அக்கிராமத்தில் அப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் 1985ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் நெசவு கூடம் துவக்கப்ட்டது.
நெசவு கூடம் லாபகரமாக இயங்காததால் ஒரு சில ஆண்டுகளில் மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கட்டிடம் பழுது அடைந்து விணாகி ஆடு,மாடுகள் கட்டும் தொழுவமாகவும், . ஒரு பகுதியை அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நெசவு கூடத்தை புதுப்பித்து வேலை வாய்ப்பு அளித்திட வேண்டுமென்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சம்மந்தப்பட்ட நெசவு கூடம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்டு, அப்பகுதி பெண்கள் பயன்பெறும் வகையில் அந்த கட்டிடம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டது.
இதனைத்தொடர்ந்து நெசவு கூடத்தின் திறந்தவெளியை பகுதியில் சிறுவர்கள் இளைஞர்கள் விளையாட ஆடை தயாரிப்பு நிறுவனம் தடைசெய்தது, அப்பகுதியிலிருந்த கட்சியின் விளம்பர பலகையும் அப்புறப்படுத்தியது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சட்டமன்ற தேர்தலின் போது புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையினால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அமைதியான சூழல் நிலவி வந்தது.
தற்போது சம்மந்தப்பட்ட இடத்தில் ஜெனரேட்டர் இயந்திரம் வைப்பதற்காக தனியார் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் முதற்கட்டமாக அஸ்திவார பணிகள் மேற்கொண்டது.
இதனையறிந்த அப்பகுதியை ஆதி திராவிட இன மக்கள் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி, அவ்வழியே வந்த இரண்டு அரசுப்பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி.,ஜவஹர்லால்,இன்ஸ்பெக்டர் அலாவுதீன் உள்ளிட்ட குன்னம் போலீசார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளிதரன், பாரதிதாசன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தினர்.
பேச்சு வார்த்தையின் போது போராட்டத்தை கைவிட மறுத்த ஆதிதிராவிட இன மக்கள் பொது பயன்பாட்டிற்காகவும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கு மைதானமாகவும் பயன்பட்டு வந்த அரசு புறம்போக்கு நிலத்தை உள் நோக்கத்தோடு, அபகரித்து ஏன் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்குகிறீர்கள் என வாக்குவாத்தில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனையறிந்த பஸ் பயணிகள் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டம் முடிவுக்கு வராது என பஸ்சை விட்டு இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள வேப்பூருக்கு நடந்து வந்து அவரவர் செல்லும் பகுதிக்கு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலத்திற்கு எவரும் உரிமை கொண்டாட கூடாது. வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் வழக்குதொடருங்கள் அதனை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்பதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலை செய்வதைவிட்டு விட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறீர்களா? என கேள்வி எழுப்பி, உங்களிடம் உள்ள தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளி அடையாள அட்டைகளை பறித்து விடுவோம் என மிரட்டல் விடுத்து அனைவரையும் மிரட்டி விரட்டியடித்தனர்.
இதனால் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு அதிகாகரிகள் இப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.