PMK Ramadoss wishes to Ramzan
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள ரமலான் வாழ்த்துச் செய்தி:
ஈகை, ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரமலான் திருநாளும், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் நோன்புகளும் இஸ்லாமியர்களின் வாழ்வில் இன்னுமொரு நிகழ்வு என்று கடந்து செல்லும் நிகழ்வுகள் அல்ல. இவை தான் இஸ்லாமிய மக்களை அவர்களின் வாழ்க்கை முறையில் புடம் போட்ட தங்கங்களாக மாற்றுகின்றன. இஸ்லாமிய மக்கள் நோன்பு காலத்தில் அதிகாலையில் தொடங்கி சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கும் நேரத்தில் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். பிறரை அவமதித்தல், புறம்பேசுதல், சபித்தல், பொய் பேசுதல் போன்ற தவறுகளைக் கூட இஸ்லாமியர்கள் செய்வதில்லை. அதுமட்டுமின்றி, தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல், பிறருக்கு கேடு செய்யாமை போன்ற நல்ல செயல்களையும் இஸ்லாமியர்கள் செய்கின்றனர்.
மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது; அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை அனைத்தையும் இஸ்லாமியர்கள் மட்டும் தான் கடைபிடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை; மற்றவர்கள் கடைபிடிக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகளும் கிடையாது. அமைதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் இந்த போதனைகள் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியவை.
உலகில் பிறந்த அனைவரும் நமது உறவுகள். அனைத்து துயரங்களும், மகிழ்ச்சிகளும் பகிர்ந்து கொள்ளப் பட வேண்டியவை என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட நான் உறுதியேற்றுக் கொள்வோம், என தெரிவித்துள்ளார்.