Police gunfire on the people who were struggling to close the Sterlite plant! Communist Party of India (Marxist)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் பல மாதங்களாக போராடி வருகிறார்கள். போராடுகிற மக்கள் மீது எண்ணற்ற பொய் வழக்குகளைப் போட்டு, காவல்துறையும், தமிழக அரசும் மக்களை ஒடுக்கி வந்துள்ளது.

இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட 18 கிராமங்களிலிருந்து மக்கள் பெருவாரியாக திரண்டு கலெக்டர் அலுவலகத்தை நோக்கி அமைதியாக பேரணியில் ஈடுபட்டுள்ளனர். போராடுகிற மக்களின் கேரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாறாக, ஆலை முதலாளியின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் போராடியவர்களை காவல்துறையினர் பெண்கள், குழந்தைகள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, ஓட, ஓட விரட்டியடித்துள்ளனர்.

கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் இருவர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமுற்றுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அமைதியாக போராடுகிற மக்கள் மீது கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளை ஏவிவிடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

இத்தகைய அராஜக நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளையும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!