Policy Awareness Camp in Perambalur for Preventing Gender Discrimination and Sexual Harassment

பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான எஸ்.மலர்விழி தலைமையில், பாலின பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான கொள்கை குறித்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான வினோதா வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும் மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.கிரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 ப.கருப்பசாமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குபுவின் தலைவருமான எஸ்.மலர்விழி பேசியதாவது:

பெண்களுக்கு எதிரான எந்தவொரு பாலின பாகுபாடும் பெண் சமத்துவத்திற்கு எதிரான தடைகள் ஆகும். பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்படிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் விசாகா மற்றும் சிலருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தொடர்ந்துள்ள வழக்கில் பாலியல் கொடுமைள் தடை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதொடு, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை எதிர்ப்பதற்கான நடைமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், வழிகாட்டியுள்ளது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்றமும் அதற்கான கொள்கைகளை வகுத்துள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் மாவட்ட நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் 9 பேர்கள் கொண்ட பாலின புரிந்துணர்வு மற்றும் புகார்கள் மீதான விசாரணைக் குழுவிடம் புகார்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்து அதில் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க குழுவிரைந்து நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து பாதிக்கப்பட்டு புகார் தெரிவித்த நபர் குறித்த இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் குழுவின் உறுப்பினரான வர்க்கறிஞர் சந்தானலட்சுமி மற்றும் வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணமூர்த்தி, எழிலரசன், ராதா, மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் முத்துசெல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!