Pongal Festival on behalf of DMK in Namakkal
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை சமத்துவப் பொங்கல் விழா நடைபெறுகிறது.
இது குறித்து கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கிழக்குமாவட்ட திமுக சார்பில் நாளை 12ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் நாமக்கல், திருச்சி ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவப்பொங்கல் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு அவர் தலைமை வகிக்கிறார். நாமக்கல் நகர திமுக சார்பில் சமத்துவப்பொங்கல் விழா வருகிற 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நாமக்கல் ஜெட்டிக்குளத்தெருவில் மதுரைவீரன் கோவில் அருகில் நடைபெறுகிறது.
விழாவில் மகளிருக்கான கோலப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே வார்டுதோறும் நடைபெற்ற கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற மகளிர் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்கம் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், நகர பொறுப்பாளர் ராணா ஆனந்தன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.