Post of Registration Clerk in Social Welfare Department for Nutrition Employees: Union Welcome!
பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் சவிதா தலைமையில் நடந்தது. மாநில செயலாளர்கள் முத்துமாலா, ஷெர்ஷாத், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் பெரியசாமி பேசினார். பின்னர் சங்க செயல்பாடுகள், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், மாநில பொதுசெயலாளர் சவிதா செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டு அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு சமூக நலத்துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணி வழங்கப்படும் என அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, அனைத்து துறைகளில் உள்ள பதிவுரு எழுத்தர் பதவிக்கு தகுதியுள்ள சத்துணவு ஊழியர்களை பணி நியமனம் செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதியத்தை அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக உயர்த்தி வழங்கவேண்டும், சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 லிருந்து 62-ஆக உயர்த்த வேண்டும். சமூக நலன் துறையில் சத்துணவு பிரிவில் 38 ஆண்டுகளாக பணிபுரியும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோர் ஊதிய உயர்வு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். ஆகையால் சத்துணவு ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என தெரிவித்தார்.