பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
கர்நாடகா மாநிலம், பிடார் மாவட்டம், ஹம்னாபாத் தாலுகா மொல்கேரா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் வருவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களும், பண்ணையின் நுழைவு வாயில், நடைபாதை மற்றும் வாகனப் பாதைகளை Footpath அமைத்து அதில் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் அல்லது குளோரின் டைஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைத்து, உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் 310 கறிக்கோழி பண்ணைகள் மற்றும் 9 முட்டை கோழி பண்ணைகள் இயங்கி வருகின்றன. பண்ணைகளை கண்காணித்திட மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு மூன்று விரைவு செயலாக்க குழுக்கள் (Rapid Response Team) வீதம் மொத்தம் 12 விரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கோழிப்பண்ணைகளை கண்காணித்துவர நடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளது.
கோழி பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உட்பட்ட வெளி மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள், கோழிகள், கோழி முட்டைகள், வாத்துகள், வாத்து முட்டைகள், வாத்துக் குஞ்சுகள் மற்றும் கோழித் தீவனங்கள் போன்றவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வாங்கும் போது கால்நடை துறையின் மூலம் சான்றளிக்கப்பட்டவைகளை மட்டுமே வாங்க வேண்டும்.
பறவைகள் சரணாலயம், வனங்கள் மற்றும் நீர் இருப்புப் பகுதியில் ஏற்படும் அசாதாரணமான பறவை இறப்புகளை உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். கோழிப்பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு ( Bio – security ) முறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்யவும், பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நச்சுக்கொல்லி மற்றும் உபகரணங்கள் இருப்பில் வைத்திருக்குமாறும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது, என அதில் தெரிவித்துள்ளார்.