Prize for Best Technology Farmer; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வேளாண்மை – உழவர் நலத்துறை தனி நிதி நிலை அறிக்கையில், வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு என்ற தலைப்பின்கீழ் இயற்கை வேளாண்மை சாகுபடி, விளைபொருட்கள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளுர் கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவித்து பரிசளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாரம்பரிய முறையை பின்பற்றி அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகளையும் வேளாண்மை ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் ஏற்றுமதியாளர்களையும், அதேபோன்று உள்ளுர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து பரிசு வழங்கிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநில அரசு ரூ.6 லட்சம் ஒதுக்கியுள்ளது என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் பயன்பெற ”வேளாண்மையில் புதிய உள்ளுர் கண்டுபிடிப்புகள்” இனத்திலும், ”வேளாண்மையில் புதிய உள்ளுர் தொழில்நுட்பம்” இனத்திலும், ”இயற்கை வேளாண்மை சாகுபடி” இனத்திலும், ”வேளாண்மை விளைபொருட்கள் ஏற்றுமதி” இனத்திலும் ஆர்வமுள்ள விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலவலகத்தில் கிடைக்கப்பெறும். அதனை பூர்த்தி செய்து, பதிவு கட்டணமாக ரூ.100- மட்டும் உரிய அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி 18.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.