Project to convert used cooking oil into biodiesel: Collector Venkatapriya initiates in Perambalur

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயினை பயோ டீசலாக மாற்றும் திட்டத்தினை பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, அவரது அலுவலகத்தில் தொடங்கி வைத்து, பெரம்பலூர் நகராட்சியில் இயங்குகின்ற 10 உணவகங்களைச் சேர்ந்த உரிமையாளர்களுக்கு, பயன்படுத்தப்பட்ட எண்ணெயினை சேகரிப்பதற்காக 50 லி. கொள்ளளவு கொண்ட கேன்களை வழங்கினார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது:

உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்பட்சத்தில் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் தின்பண்டங்களை பொதுமக்கள் உட்கொள்ளும்போது மனிதர்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புக்கள் உற்பத்தி ஆகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயில் 25 சதவீதம் டோட்டல் போலர் காம்பவுண்ட் குறைவாக உள்ள எண்ணெய் மட்டுமே சமையலுக்கு உகந்த எண்ணெய் ஆகும். ஒரு முறைக்கு மேல் பயன்படும் பட்சத்தில் எண்ணெயின் தரம் குறைந்துவிடும்.

இதனால் மனிதர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மறுசுழற்சிக்காக சிறிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதனை தவிர்க்கவும், பொதுமக்களின் நலனை பாதுகாத்திடவும், பயன்படுத்திய அனைத்து எண்ணெய்களையும்; மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்காகவும், உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் பயன்படுத்திய எண்ணெயினை சேகரித்து சுத்திகரிப்பு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50 உணவகம் மற்றும் இனிப்பகங்களிலிருந்து பயன்படுத்தப்பட்ட எண்ணெயினை சேகரிக்கும் நடவடிக்கை முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் 30 லிட்டர் வரை ரூ.25 எனவும், 30 லிட்டருக்கு மேல் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.30 எனவும் விலை நிர்ணயம் செய்து உணவகங்களிலிருந்து சேகரிக்கப்பட உள்ளது. பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் என 4 மாவட்டங்களிலிருந்து பயன்படுத்திய எண்ணெயினை சேகரித்திட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் மூலம் ரூகோ என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தினர் 4 மாவட்டங்களின் மூலம் சேகரிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயினை திருச்சியில் சேமித்து வைத்து குறிப்பிட்ட கொள்ளளவு பெறப்பட்டவுடன் அதனை சுத்திகரிப்பதற்காக பெங்களுரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு பயோடீசலாக சுத்திகரிப்பு செய்து, அது வாகன பயன்பாட்டிற்காக பிற எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் அரசு மூலம் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் எம். கவிக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பி. சீனிவாசன், ஆர். இளங்கோவன், பி.என். ரவி, ரூகோ நிறுவன அலுவலர் கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!