Provided loans of Rs 1.92 crore to 32 collective liabilities committees; Perambalur Collector Venkatapriya!
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆபிசில், நபார்டு வங்கி, கனரா வங்கி மற்றும் மறுமலர்ச்சி அறக்கட்டளை இணைந்து கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு கறவை மாடு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் வெங்கட பிரியா 32 கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு தலா ரூ.6 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1 கோடியே 92 லட்சம் கடன்கள் வழங்கிய அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா தொற்று குறைந்து அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் பல்வேறு தொழில்களை தொடங்கிட கடன் உதவிகளை அதிக அளவில் வழங்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மறுமலர்ச்சி அறக்கட்டளை மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மகளிர் கூட்டுப்பொறுப்பு குழுக்கள் 32 குழுவினருக்கு கறவை மாடு வளர்ப்பு தொழிலுக்காக தலா ரூ.6 லட்சம் கடன் உதவி நபார்டு வங்கி மற்றும் கனரா வங்கி சார்பில் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 12 குழுக்களுக்கு இதே போன்று கடன் உதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் அனைவரும் சிறப்பாக தொழில் செய்து வங்கி கணக்குகளை சிறப்பாக பராமரித்து திருப்தி அளிக்கும் வகையில் தொழில் செய்து வருகிறார்கள். இது மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. கறவை மாடு கடன் பெறும் உங்கள் அனைவருக்கும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
கால்நடை வளர்ப்பு குறித்து உங்களுக்கு பல்வேறு விஷயங்கள் தெரிந்திருந்தாலும் லாபகரமாக இதை செய்திட பல்வேறு நுணுக்கங்கள், பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்துகொள்ள பயிற்சி அவசியம். பால் உற்பத்தி செய்வதுடன் அதை பயன்படுத்தி பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும் .
கறவை மாடுகளுக்கு குறைந்த செலவில் சத்துகள் மிகுந்த உணவு அளிப்பது குறித்தும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்தும் கால்நடை பராமரிப்புத் துறையினர் உங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இவைகளை பயன்படுத்தி சிறப்பாக தொழில் செய்து பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என தெரிவித்தார்.
நபார்டு மற்றும் கனரா வங்கி, கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள், மறுமலர்ச்சி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் கூட்டுப்பொறுப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.