Public protest demanding re-election of village ward member near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம் பென்னக்கோணம் ஊராட்சியில், தாங்கள் சுட்டிக் காட்டும் நபரை ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவிக்காத, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதோடு, மறு தேர்தல் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பென்னக்கோணம் ஊராட்சியில், 9 வார்டுகள் உள்ளது. 3500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள இந்த ஊராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அவ்வூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி இளங்கோவன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை ஒவ்வொரு ஊர் ஆட்சியிலும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதனிடையே பென்னக்கோணம் ஊராட்சியில் 7 மற்றும் 8 வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பணம் வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட ஒருவரை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 7 மற்றும் 8வது வார்டு பகுதி மக்கள் தாங்கள் கூறும் நபரையே துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என வார்டு உறுப்பினரிடம் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை நிராகரித்த வார்டு உறுப்பினர்கள் தலைமறைவானதால், ஆத்திரமடைந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னாள் திரண்டு, தாங்கள் கூறும் நபரையே துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும், இல்லையேல் உங்களது பதவிகளை ராஜினாமா செய்யுங்கள் என கூச்சலிட்டும், 7 மற்றும் 8வது அடுக்கு மறுதேர்தல் நடத்த வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் நாளை பகுதி மக்களின் கோரிக்கையை வார்டு உறுப்பினர் நிராகரித்தால், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.