Public Welfare Schemes in Perambalur District within 100 Days of the Chief Minister of Tamil Nadu: Collector Information!

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற 100 நாட்களில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்துப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையிலான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் உரிய தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிட்டு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கென்று தனித்துறையினை உருவாக்கி பொதுமக்களின் மனுக்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,466 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 3,253 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 57 நபர்களுக்கு ரூ.13.25 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 11 நபர்களுக்கு ரூ.23.10 லட்சம் மதிப்பில் கல்விக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 225 நபர்களுக்கு ரூ.2.70 கோடி மதிப்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தமிழ்நாடு முதலமைச்சரின் போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அலை உருவாக வாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் கூறிவரும் சூழலில், மூன்றாவது அலை உருவானாலும் அதை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களை கண்டறியும் விதமாக வீடுவீடாகச் சென்று தொற்று கண்டறியும் பணிக்காக 2,134 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்ப்பட்டு போதிய அளவிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து கொரேனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

578 படுக்கை வசதிகளுடன் 04 தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 3,078 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 67,144 நபர்களுக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நோய்த்தடுப்பு நடவடிக்கையாக 4,669 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் 278 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் மற்றும் 632 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட 1,754 நபர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஜிஸன் பற்றாக்குறை ஏற்படா வண்ணம், புதியதாக ரூ.1 கோடி மதிப்பீட்டில், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரேனா தொற்றாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்திசெய்யப்படும். ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் தவணையாக 1,43,469 நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 22,998 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணையாக 726 நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 4 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டுள்ளதின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் தினசரி 16,665 மகளிர் பயன்பெறுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர், திருநங்கைகள் தினசரி 119 பேர் பயன் பெறுகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ செலவை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அரசே ஏற்கும் என்று அறிவித்ததன் அடிப்படையில், 7 தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்ற 612 நபர்களுக்கு ரூ.7.59 கோடி காப்பீட்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கொரோனா தடுப்புப் பணியில் தன்னமலற்று கடமையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்கள் உட்பட முன்களப் பணியாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில், ஊக்கத்தொகையினை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டதன், அதனடிப்படையில், காவல்துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 612 ஆளிநர்களுக்கு ரூ.5,000/-வீதம் ரூ.30.60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. ஊடகத் துறையைச் சார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு ஊக்கத் தொகை தலா ரூ.5,000/-வீதம் 53 பத்திரிக்கையாளர்களுக்கு ரூ.2.65 லட்சம் வழங்கப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் வகையில், 4,152 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.

மக்களை தேடி மருத்துவம் என்ற மருத்துவ சேவை மூலம் நமது மாவட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் 8299 நபர்களுக்கும், இரத்த கொதிப்பு நோயாளிகள் 13625 நபர்களுக்கும், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 4202 நபர்களுக்கும் என ஆக மொத்தம் 26,126 பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று மருந்துபொருட்கள் வழங்கும் பணிகள் தநடைபெற்று வருகின்றது. முடக்குவாதத்தால் பாதிகப்பட்டவர்களுக்கு இயன்முறை சேவைகளின் மூலம் 212 பயனாளிகள் பயனடைவார்கள்.

முதலமைச்சரின் தேர்தல் அறிக்கையில், அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 1,84,695 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூபாய் 73.88 கோடி கொரேனா கால நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 7.39 கோடி மதிப்பில் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வீதம் 98 நபர்களுக்கு ரூ. 3.92 லட்சம் மதிப்பில் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 98 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். குடும்ப அட்டை பெறாத திருநங்கையர்களுக்கு கொரோனா கால உதவித்தொகையாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 34 திருநங்கையர்கள் பயன் பெற்றுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 இலட்சம் வழங்கும் திட்டத்தின் கீழ், 24 குழந்தைகளுக்கு ரூ.72 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுடைய மீதமுள்ள குழந்தைகளுக்கும் நிவாரண உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்றால் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும் என்ற திட்டத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் அமையும் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நா.அங்கையர்க்கண்ணி, ஆர்.டி.ஓ., ச.நிறைமதி, ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அ.லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மரு.செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ச.குமரிமன்னன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!