Publish immediate wage promotion notice to Co-operative Bank Employees! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டிலுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிப் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் இன்று வரை இறுதி செய்யப்படவில்லை. கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட வழங்காமல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு இழுத்தடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப் படுகிறது. இதுதொடர்பாக அரசு பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இடையே இது குறித்து பேச்சுகள் நடத்தப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது வழக்கம். அதன்படி மத்தியக் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2015-ஆம் ஆண்டு திசம்பருடன் முடிவடைந்து விட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின்னர் 34 மாதங்கள் ஆகியும் இன்று வரை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

அதேபோல், நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கான ஊதிய ஒப்பந்தம் 2016&ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 22 மாதங்கள் முடிவடைந்த போதிலும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தீர்மானிக்கப்படவில்லை.

கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தீர்மானிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுவினர் கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுக்களை நடத்தியது. கடந்த 6 மாதங்களுக்கு முன் நடைபெற்ற பேச்சுக்களின் அடிப்படையில் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று தமிழக அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்ட போதிலும், அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை. புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால் 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 17,000 பேருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் அக்டோபர் 24-ஆம் தேதி கூட்டுறவு வங்கிகள் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 30&ஆம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2-ஆம் தேதி உண்ணாநிலைப் போராடமும், 13-ஆம் தேதி வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப் போவதாக கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளாத தமிழக அரசு, கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகிறது.

கூட்டுறவு வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் தான் புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டுறவு வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் தவிப்பதாகக் கூறப்படும் சூழலில் தான் தமிழக அரசு அவசர அவசரமாக கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தி, அதிமுகவினரே வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு மகிழுந்து உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு வாரி இறைக்கிறது. ஆனால், கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் மட்டும் இல்லாத காரணங்களைக் கூறி இழுத்தடித்து வருவது மிக மோசமான அநீதியாகும்.

தமிழக ஆட்சியாளர்களின் இந்த அநீதி இனியும் தொடரக்கூடாது. கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அத்துடன் புதிய ஊதிய விகிதத்தின்படி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் அரசு வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!